Translate

Saturday, 2 December 2017

காவல்துறை நடத்தை விதி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 மற்றும் 157 காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலருக்கு புலன்விசாரணை நடத்தக்கூடிய அதிகாரத்தை வழங்குகிறது. இந்த அதிகாரங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி புலன்விசாரணை மேற்கொள்ளலாம்.

2. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர்களில் காவலரைச் ( Gr. II PC)  சேர்த்துக் கொள்ளக்கூடாது.

3. தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்துவதில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளார்கள். சிறு குற்றங்கள் அல்லது விரைவாக விசாரணை முடிக்கப்பட வேண்டிய குற்றங்கள் ஆகியவற்றில் தலைமைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்திட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர் (SHO) அதாவது காவல் சார்பு ஆய்வாளர் / காவல் ஆய்வாளர் ஆகியோர்களுக்கு புலன்விசாரணை நடத்தும் அதிகாரம் உள்ளது. பெருங்குற்ற வழக்குகளில் காவல்நிலை ஆணைகளின்படியும் மற்றும் அவ்வப்போது வழங்கப்படும் துறை சார்ந்த அறிவுரைகளின்படியும், காவல் ஆய்வாளர் புலன்விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்.

4. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன்படி காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலருக்கு 'பிடியாணை வேண்டா குற்றங்களில்' (Cognizable Offence) மட்டுமே விசாரிக்கும் அதிகாரம் உள்ளது.

5. பிடியாணை வேண்டாக் குற்றங்களின் மீது புலன்விசாரணையை நடத்த காவல் ஆய்வாளர் குற்றவியல் நடுவரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

6. பிடியாணை வேண்டும் குற்றங்களை (Non Cognizable Offence) பொறுத்துவரையில், காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு அதுக்கு புலன்விசாரணை நடத்திட அதிகாரம் கிடையாது என்றபோதிலும் அவர் உரிய குற்றவியல் நடுவர் அவர்களிடமிருந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190(1)(பி) உ/இ 155(4) மற்றும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண் - 561  ன்படி முன்அனுமதி பெற்று புலன்விசாரணை நடத்தலாம்.

7. ஒரு குற்ற வழக்கில் பல பிடியாணை வேண்டும் குற்றங்களும் அதனோடு சேர்ந்து ஒரேயொரு பிடியாணை வேண்டாக் குற்றமும் புரியப்பட்டிருந்தால் காவல்நிலைய பொறுப்பு அலுவலர் அந்த வழக்கை மொத்தமாக பிடியாணை வேண்டா குற்றமாக கருதி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 155(4) ன்படி புலன்விசாரணை நடத்தலாம். இதற்காக காவல் அலுவலர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 155(2)ன்படி குற்றவியல் நடுவரிடமிருந்து அனுமதி ஏதும் பெற தேவையில்லை.

8. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன்படி காவல்நிலைய பொறுப்பு அலுவலர் 'பிடியாணை வேண்டா குற்றங்களை' பொறுத்துவரையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன்படி FIR பதிவு செய்த பிறகே, அதுகுறித்து புலன்விசாரணை நடத்திட அதிகாரம் படைத்தவராகிறார்.

9. காவல்நிலைய பொறுப்பு வகிக்கும் அலுவலர், தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பிடியாணை வேண்டா குற்றம் சம்மந்தமாக புலன்விசாரணை செய்தலை எந்தவொரு நீதிமன்றத்தாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(2) ன்படி கேள்வி கேட்க முடியாது.

No comments:

Post a Comment

Insurance policy

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட். ************************************* சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்க...