Translate

Thursday 8 February 2018

"மாதவிடாய் - ஆண் புரிந்துகொள்ள வேண்டிய பெண்ணின் நிகழ்வு"

நாப்கின்னோடு(Napkin) தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் பழக்கம் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது...நாப்கின்னைப் பற்றிப் பேசுவதற்குமுன் மாதவிடாய் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்று...

மாதவிடாய் என்றால் என்ன??..மாதவிடாயை இந்த சமூகம் எவ்வாறு பார்க்கிறது? மாதவிடாயைப் பற்றி இந்த சமூகம் தெரிந்து வைத்திருக்கிறதா?...அப்படியே தெரிந்துவைத்திருந்தாலும் அது சரியானதாக இருக்கிறதா??...பார்க்கலாம்...

மாதவிடாயைப் பற்றி அறிவியலாக சொல்ல வேண்டுமென்றால் 'பெண்களின் அடிவயிற்றில் கருப்பைக்கு இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக சினைப்பைகள்(Ovary) இருக்கும்...சினைப்பையில்தான் பெண்கள் கருத்தரிப்பதற்கான கருமுட்டைகள் வளர்கின்றன...இந்தக் கருமுட்டை கருக்குழாய்(Fallopien tube) வழியாக கருப்பையை அடையும்...கருமுட்டை ஆணின் விந்தணுவோடு இணைந்தால் கரு உருவாகும்...அந்த கருமுட்டை ஆணின் விந்தணுவோடு சேரவில்லையென்றால் அது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும்...அங்கே இருக்கக்கூடிய பஞ்சு போன்ற மென்மையான திசுப்படலம் கரு உருவாகாதபோது உடைந்து இரத்தமாக வெளியேறும்...இந்த இரத்தப்போக்கு மாதம் ஒருமுறை 3-5 நாட்கள் வரை நடக்கும்...இதுதான் மாதவிடாய்....

படிப்பறிவில்லாத மக்களுக்கு இதனைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாரான பின்பு மாதாமாதம் நடக்கக்கூடிய இரத்தப்போக்குதான் மாதவிடாய்...

இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் திரவமாகவோ அல்லது கட்டியாகவோ அல்லது திரவமும் கட்டியும் சேர்ந்தமாதிரியோ ஒவ்வொரு மாதமும் 3-5 நாட்கள் வரை வெளியேறும்...

பூப்பெய்துகிற பெண்களை இந்த சமூகம் எவ்வாறு நடத்துகின்றது என்பது நமக்குத்தெரியும்...அதுவரையில் தன்னுடைய இயல்புத்தன்மையோடு குழந்தைத்தனமாக சுற்றிக்கொண்டிருந்த பெண்களை ஒரு அறைக்குள் போட்டு பல நாட்கள் பூட்டிவைத்து தேவையான உணவுகளை கதவு வழியே கொடுத்து இனி நீ அடக்கமாக நடக்கவேண்டும்,ஆண்களைப் பார்க்கக்கூடாது,வெளியில் சுற்றக்கூடாது என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை விதிக்கும்...

பூப்பெய்துவதைத்தான் சமூகம் இவ்வாறு பார்க்கிறதென்றால் மாதவிடாயை சந்திக்கக்கூடிய பெண்களை சமூகம் நடத்தக்கூடிய விதம் கொடுமையின் ஒடுக்குமுறையின் உச்சம்...

முதல் மாதவிலக்கை சந்திக்கும் பெண்கள்(கிராமப்புறங்களில்) துணி மற்றும் வைக்கோல்தான் பயன்படுத்த வேண்டும்,16 நாட்கள் வரை ஆண்களைப் பார்க்கக்கூடாது,பார்த்தால் இரத்தம் வரும்,சாப்பாடு சிந்தாமல் சாப்பிட வேண்டும்,ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டும் என்பன போன்ற மூடநம்பிக்கைக் கட்டுப்பாடுகள் இன்றுவரை இருக்கின்றன...

நகர்ப்புறங்களில் மாதவிலக்கைச் சந்திக்கும் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும்,குளித்தால் சளி பிடிக்கும்,காயம் படும்,பூக்களைத் தொட்டால் வாடிவிடும்,கனமான பொருட்களைத் தூக்கக்கூடாது,தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும்,தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக்கூடாது,வீட்டு வாசலில்தான் உட்கார வேண்டும்,பின்வாசல் வழியாகத்தான் வீட்டுக்குள் வரவேண்டும்,விளையாடக்கூடாது,குங்குமம் வைக்கக்கூடாது,பூஜை அறைக்குள் செல்லக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்...

இதனையெல்லாம் மீறி ஒரு பெண் தன் விருப்பப்படி செயல்பட்டால் அவளை "தீட்டுப்பட்டுவிட்டாள்" எனக்கூறி சமூகம் கண்டபடி திட்டும்...

மாதவிடாயின்பொழுது ஒரு பெண்ணுக்கு ஆண் சமூகமும் ஆணாதிக்க சிந்தனையை உள்வாங்கிய பெண் சமூகமும் வெளிப்புறத்திலிருந்து கொடுக்கும் ஒடுக்குமுறையால் ஏற்படும் சிரமத்தைவிட  உடலளவில் தங்களுக்குள்ளாகவே பெண்கள் சந்திக்கும் சிரமங்கள்தான் நரக வேதனை...

மாதவிடாய் எந்த நாட்களில் எந்த சமயத்தில் ஏற்படும் என்று தெரியாது...எனவே அதனைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும்...திடீரென்று மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் ஏற்படும் இரத்தப்போக்கை சமாளிக்க நாப்கின்னோ துணியோ கைவசம் இருக்க வேண்டும்,நாப்கின் மாற்றுவதற்கு சரியான அறை வசதி வேண்டும்,நாப்கின்னை வைத்தபிறகு இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் (Bleeding) நாப்கின்னைத் தாண்டி வெளியில் உடையில் இரத்தம் படாமல் இருக்கவேண்டும்,அப்படி பட்டால் அந்த இரத்தக்கறை வெளியில் தெரியும்,அதனை சமாளிக்க அதற்குத் தகுந்தாற்போல் உடை அணிய வேண்டும்,நாப்கின்னை 3 - 6 மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்,நாப்கின்னை வைத்திருப்பதால் உராய்வுத்தன்மை ஏற்பட்டு அரிப்பு ஏற்படும்...அதனை சமாளிக்க வேண்டும்...இப்படியாக இவ்வளவு எண்ணங்களும் பெண்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்...

நாப்கின் பயன்பாட்டிலும்கூட சில சிக்கல்கள் இருக்கின்றன...இந்தியாவில் எல்லாவிதமான பெண்களும் நாப்கின் பயன்படுத்துவதில்லை....100% பெண்களில் 27% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர்...மீதமிருக்கக்கூடிய பெண்கள் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த துணிகளையும் பாவாடையையும் சாம்பலையும் ரேசன் கடை சேலைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்...இன்று விளம்பரங்களில் வரும் பல நாப்கின்களில் இரசாயனங்கள் அதிகமாக சேர்க்கப்படுவதால் சில நேரங்களில் தொற்று ஏற்பட்டு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள்கூட உள்ளன...

நாப்கின்களைவிட துணிகள் ஆரோக்கியமானது என்றாலும்கூட அதனைப் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை வார்த்தையால் விவரிக்க முடியாது...மாதவிடாயின்போது இரத்தப்போக்கு அதிகமாக ஏற்படுவதால் அதனைத் தாங்கிய துணிகளில் இரத்தவாடை இருக்கும்...அதனை வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியாமல் நன்றாகத் துவைக்க வேண்டும்,துவைத்து நன்றாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும்,அதை வீட்டிலுள்ளவர்கள் கண்களில் படாதபடி செய்யவேண்டும் என்பன போன்று பல நெருக்கடிகள் துணிகளைப் பயன்படுத்துவோருக்கு...

இதனைப்போன்று நாப்கின்னைப் பயன்படுத்துவோர் அதனை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஏதாவது ஒரு இடத்தில் கொண்டுபோய் எரிக்கவேண்டும்...அப்படி எரிக்கும்போது ஏற்படக்கூடிய நாற்றம் சுற்றுப்புறங்களுக்கும்கூடப் பரவும்...இதுபோன்ற இன்னும் சில சிக்கல்கள் நாப்கின் பயன்படுத்துவோருக்கு...

(இந்த Napkin disposal மற்றும் துணியை சுத்தப்படுத்துவது தொடர்பானவைகள் எல்லாம் பெரும்பாலும் கற்பிதங்களே....ஆணுக்குத் தெரியாமல்தான் செய்யவேண்டுமென்ற அப்படியான அவசியங்கள் ஏதுமில்லை....)

மாதவிடாய் நடந்தபிறகுதான் இவ்வளவு சிரமமென்றால் மாதவிடாய் நடக்கும் முன்பு இருக்கக்கூடிய நிலை உளவியலாக மிகப்பெரிய சிக்கலைக் கொடுக்கும்...இதனை premenstrual syndrome என்பர்...மாதவிடாய் தோன்றுவதற்குமுன் கவலை,பதற்றம்,ஆர்வமின்மை,அசதி,கோபம்,எரிச்சல்,தூக்கமின்மை,பாதுகாப்பற்றதாக உணர்தல்,தனிமை விரும்புதல்,தான் அழகாக இல்லை என நினைக்கும் பெண்களுக்கும் சமூகத்தால் அங்கீகாரம் கிடைக்காத பெண்களுக்கும் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை,இந்த அனைத்திற்கும் உச்சமாக தற்கொலை எண்ணம் வரை இந்த premenstrual syndrome என்று சொல்லக்கூடிய மாதவிடாய்க்கு முந்தைய நிலையில் பெண்களுக்குத் தோன்றும்...பல நேரங்களில் இந்த எண்ணங்கள் மாதவிடாய் தொடங்கி முடியும்வரை இருக்கும்...சில சமயங்களில் பெண்கள் தேவையில்லாமல் அதிகளவு கோபப்படுவதற்கான காரணம் இதுதான்...

மாதவிடாய் சில பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மாதாமாதம் ஏற்படாமல் 2,3 மாதத்துக்கு ஒருமுறை 6 மாதத்துக்கு ஒருமுறை என ஏற்படும்...இதனை Irregular periods என்பர்...அவ்வாறு ஏற்படும்போது 6 மாதத்திற்கும் சேர்த்து இரத்தப்போக்கு ஒரே சமயத்தில் வெளியேறும்....இந்த இரத்தப்போக்கானது தொடர்ந்து 15,20 நாட்கள் வரை இருக்கும்...இவ்வாறு Irregular periodsஐ சந்திக்கும் பெண்களுக்கு தசைப்பிடிப்பு,மார்பக வலி,மார்பக வீக்கம்,தலைவலி,தோள்மூட்டு வலி,தண்டுவட வலி,மனச்சோர்வு,எரிச்சல,உடல் அசதி,அடிவயிற்றுவலி,வாந்தி,குமட்டல் போன்றவை சொல்ல முடியாத அளவு ஏற்படும்...

இவ்வளவு சிரமங்களையும் வேதனைகளையும் கொண்ட மாதவிடாயை சந்திக்கும் பெண்களை இந்த சமூகம் வீட்டுக்குத் தூரம்,வீட்டுக்கு விலக்கு என இன்னமும் ஒதுக்கி,ஒடுக்கித்தான் வைத்துக்கொண்டிருக்கிறது...

ஆதிகாலத்துப் பெண் தன்னுடைய முதல் மாதவிலக்கின்போது ஏற்பட்ட இரத்தத்தை துடைக்க பஞ்சு போன்ற பொருளைப் பயன்படுத்தினாள்...அந்தப் பயன்பாடுதான் பின்னாளில் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் உடை கண்டுபிடிக்கத் தொடக்கமாக அமைந்தது...அந்தப் பெண் சமூகத்தின் நிலை தன்னுடைய உடல் அளவில் ஏற்படக்கூடிய இயல்பான மாற்றத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசமுடியாமலும் நாப்கின்னை கடையில் வாங்கினாலும்கூட அதனை பேப்பரால் சுற்றி கருப்பு கவரில் வைத்து மறைத்து மறைத்துக் கொண்டுவரும் நிலையில்தான் இன்றும் இருக்கிறது...

எனவே மாதவிடாயைப் பற்றி சரியான முறையில் சரியான செய்திகளை இன்றைய தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஆண் குழந்தை,பெண் குழந்தை என பாலின வேறுபாடு பார்க்காமல் சிறுவயதிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது....

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் "மாதவிடாய் - ஆண் புரிந்துகொள்ள வேண்டிய பெண்ணின் நிகழ்வு" என ஏன் குறிப்பிட்டேன் என்றால் மாதவிடாயின்போது பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வரக்கூடிய தூய்மையான இரத்தத்தின் வழியேதான் இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நானும் மனிதனாகப் பிறக்கின்ற ஒவ்வொரு ஆணும் (ஆண்தான் பெண்ணைவிட உயர்ந்தவன் என நினைக்கின்ற ஆணும் சேர்த்து),எங்களைப் போன்ற ஆண் குழந்தைகளைப் பெற்றுத்தருகின்ற பெண்ணும் என அனைத்து மனித உயிர்களும் அந்த தூய்மையான இரத்தத்தின் வழியேதான் பிறந்தன,பிறக்கின்றன...

மாதவிடாயைப் பற்றி முழுமையாக ஒவ்வொருவரும்(முக்கியமாக ஆண்கள்) தெரிந்துகொள்வதோடு மட்டுமில்லாமல் தன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய தாய்,அக்கா,தங்கை,மனைவி போன்ற பெண்களிடம் மாதவிடாயைப் பற்றி வெளிப்படையாகப் பேசி மாதவிடாய் நாட்களில் ஓய்வு தேவைப்படும் பெண்களுக்கு ஓய்வுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, உடலளவில் சிக்கல்கள் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவர்களினுடைய உளவியலைப் புரிந்துகொண்டு அன்பாகவும் அரவணைப்போடும் பாசத்தோடும் நேசத்தோடும் நடந்துகொள்ள வேண்டியதே விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்த சமூகத்தில் வாழும் நம் ஒவ்வொருவரின் பிறவிக்கடமை...இதன்மூலம்தான் பாலின சமத்துவ சமூகம் உருவாகும்....

No comments:

Post a Comment

Insurance policy

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட். ************************************* சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்க...